செய்திகள்
தேவேகவுடா

காங்கிரஸ் ஆதரவுடன் தேவேகவுடா மேல்-சபை எம்.பி. ஆகிறார்

Published On 2020-01-12 12:39 GMT   |   Update On 2020-01-12 12:39 GMT
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த தேவேகவுடா மேல்-சபை எம்.பி. பதவிக்கு நிறுத்தப்படுகிறார். இதை அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் தேவேகவுடா 5 முறை (1991-2014) போட்டி யிட்டு வெற்றிபெற்றார். இந்த தடவை அவர் தனது பேரனுக்காக அந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார்.

தேவேகவுடா தும்குரு தொகுதியில் போட்டியிட்டு பா.ஜனதா வேட்பாளர் பசவராஜிடம் 13 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரது பேரன் பிரிஜ்வால் ரேவண்ணா ஹசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த தேவேகவுடா மேல்-சபை எம்.பி. பதவிக்கு நிறுத்தப்படுகிறார். இதை அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் ஆதரவுடன் அவர் மேல்-சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 4 எம்.பி.க்களின் பதவி காலம் ஜூன்மாதம் முடிவடைகிறது. காங்கிரசை சேர்ந்த ராஜீவ்கவுடா, ஹரிபிரசாத், பா.ஜனதாவை சேர்ந்த பிரபாகர் கோரே, மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த குபேந்திரரெட்டி ஆகியோரது பதவிகாலம் முடிகிறது.

ஒரு மேல்-சபை எம்.பி. யை தேர்வு செய்ய 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி பா.ஜனதா 2 உறுப்பினர்களை மேல்- சபைக்கு அனுப்பும். அந்த கட்சிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதோடு 2 சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.

மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 34 உறுப்பினர்களே உள்ளனர். மேல்-சபை எம்.பி.க்கு அந்த கட்சிக்கு இன்னும் 10 உறுப்பினர்கள் தேவை. 68 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவை அந்த கட்சி நம்பி இருக்கிறது.


தேவேகவுடா காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல நெருக்கமாக இருப்பதால் அவரை அந்த கட்சி ஆதரிக்கும் என்று மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஒரு எம்.பி. தொகுதியை பெறுகிறது. மல்லிகார்ஜுன கார்கே, கே.எச்.முனியப்பா, முடாஅனுமன்கவுடா ஆகியோரில் ஒருவருக்கு மேல்-சபை எம்.பி. பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.

Tags:    

Similar News