செய்திகள்
மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது - மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டு

Published On 2020-01-11 23:25 GMT   |   Update On 2020-01-11 23:25 GMT
தமிழகத்தில் சாலை விபத்துகள் 29 சதவீதம் குறைந்து உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார்.
மும்பை:

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு வார தொடக்க விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் 5 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இதில் 1½ லட்சம் பேர் வரை உயிரிழக்கிறார்கள். 2½ லட்சத்தில் இருந்து 3 லட்சம் பேர் காயம் அடைகிறார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 62 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.

விபத்துகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. சாலை விபத்துகளை குறைக்க எனது அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் நாட்டில் விபத்துகளை குறைக்க முடியவில்லை.

ஆனால் தமிழகத்தில் சாலை விபத்துகள் 29 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல உயிரிழப்புகளும் 30 சதவீதம் குறைந்துள்ளது. இது பாராட்டுக்குரியது.

பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலமும், போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமும் விபத்துகளை குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News