செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ கோர்ட்டில் ஆஜர்

Published On 2020-01-10 09:15 GMT   |   Update On 2020-01-10 09:15 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரானார். முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் கோர்ட்டில் ஆஜராவது இது முதல் முறை ஆகும்.
ஐதராபாத்:

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2011-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் 2012-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. அவரை கைது செய்தது. 16 மாதங்களுக்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடைய 11 பேரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐதராபாத் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி வந்தனர்.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். இதனால் அலுவலக பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்த போது ஜெகன்மோகன் ரெட்டியின் கோரிக்கைக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு அவரை 10-ந்தேதி கோர்ட்டில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரானார். முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர் கோர்ட்டில் ஆஜராவது இது முதல் முறை ஆகும். அவருடன் அவரது நெருங்கிய உதவியாளரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்சாய் ரெட்டியும் ஆஜரானார்.

இதையொட்டி கோர்ட்டு வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News