செய்திகள்
பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் எதிரொலி- மோடியின் அசாம் பயணம் ரத்து

Published On 2020-01-08 16:56 GMT   |   Update On 2020-01-08 16:56 GMT
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. 

இந்த நிலையில் அசாமில் 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு திருவிழா கவுகாத்தி நகரில் 10-ம் தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் அசாம் அரசுக்கு பிரதமர் மோடி தரப்பிலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும், விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அசாம் பயணத்தை தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அசாம் மாநிலத்தில் அனைத்து  மாணவர்கள் சங்கம், வடகிக்கு மாணவர்கள் சங்கம் ஆகியவை, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வடகிழக்கு மாநிலங்களின் எந்தப் பகுதிக்கு வந்தாலும் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News