செய்திகள்
ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த மீனவர்கள்

பாக். சிறையிலிருந்து விடுதலையான ஆந்திர மீனவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்திப்பு

Published On 2020-01-08 15:17 GMT   |   Update On 2020-01-08 15:17 GMT
பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆந்திர மீனவர்கள் 20 பேரும், முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தனர்.
அமராவதி:

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படது முதல், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன. 

எல்லையைத் தாண்டி ஊடுருவுபவர்களையும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்களது நாட்டிற்குள் நுழைபவர்களையும் பாதுகாப்பின் அடிப்படையில் இருநாடுகளும் கைது செய்து வருகின்றன.

அவ்வகையில், கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடலோர காவல்படை கைது செய்தது. கராச்சி மாவட்டத்தில் உள்ள மலிர் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது.

இதற்கிடையே, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும், வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இந்தியா வந்தடைந்த ஆந்திர மீனவர்கள் 20 பேரும் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை அமராவதியில் இன்று சந்தித்தனர்.
Tags:    

Similar News