செய்திகள்
மம்தா பானர்ஜி

அரசியல் இருப்பு இல்லாதவர்கள் நடத்திய ஸ்டிரைக் -மம்தா விளாசல்

Published On 2020-01-08 11:31 GMT   |   Update On 2020-01-08 11:31 GMT
அரசியல் இருப்பு இல்லாதவர்கள் வேலைநிறுத்தம் போன்ற மலிவான அரசியல் செய்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா:

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. 

மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீவைப்பு, அரசு பேருந்துகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 



இப்போராட்டம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சியை நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டம் என வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான காரணங்களை நான் ஆதரிக்கிறேன். ஆனால், எனது கட்சியும், அரசாங்கமும் முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்காது.

மேற்கு வங்கத்தில் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த அரசியல் இருப்பும் இல்லாதவர்கள் வேலைநிறுத்தம் போன்ற மலிவான அரசியல் செய்து, மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கின்றனர். 

அவர்கள் சிஏஏ அல்லது என்ஆர்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தவில்லை. வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதன்மூலம், குறுக்குவழியை விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News