செய்திகள்
வைரல் புகைப்படம்

மாணவர் போராட்டத்தில் தாக்கப்பட்டது உண்மை ஆனால் காயங்கள்?

Published On 2020-01-08 07:22 GMT   |   Update On 2020-01-08 07:22 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களில் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட மாணவர் போலி காயங்களை உருவாக்கியதாக கூறப்படுகிறது.



இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சூரி கிரிஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5-ம் தேதி நடைபெற்ற கலவரத்தில் காயமுற்றதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தலை மற்றும் கைகளில் காயத்திற்கு கட்டுடன் இருக்கும் சூரி கிருஷ்ணன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கலவரத்தில் தாக்குதலுக்கு ஆளான சூரி கிருஷ்ணன் தனது தலை மற்றும் கைகளில் காயம் ஏற்படாமலேயே கட்டுப் போட்டு புகைப்படங்களை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. வைரல் பதிவுகளில் மூன்று புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.



இவற்றில் ஒரு புகைப்படத்தில் சூரி கிருஷ்ணன் தலை மற்றும் கைகளில் காயத்திற்கான கட்டு போடப்பட்ட நிலையிலும், இரண்டாவது புகைப்படத்தில் தலையில் மட்டும் கட்டுடன் காட்சியளிக்கிறார். மூன்றாவது புகைப்படத்தில் கழுத்தில் மாலையுடன் காயம் ஏற்பட்டதற்கு எவ்வித அறிகுறியும் இன்றி காணப்படுகிறார். 

மூன்று புகைப்படங்களும், மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக தலையில் பலத்த காயம், கைகளில் ஏற்பட்ட முறிவுகளை மிக குறுகிய காலக்கட்டத்தில் சரி செய்து கொண்டவர் எனும் தலைப்பில் வைரலாகியுள்ளது. வைரல் பதிவுகளை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்துள்ளனர்.

இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலையாள செய்திகளில் கேரளா வந்த சூரி கிருஷ்ணனை அங்குள்ள இந்திய மாணவர் சங்கத்தின் பணியாளர்கள் வரவேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பதிவிடப்பட்டு இருந்த புகைப்படங்களில் கிருஷ்ணனின் தலை, கைகளில் கட்டு எதுவும் காணப்படவில்லை.



காயம் ஏற்படாமல் ஏமாற்றியதாக கிருஷ்ணன் பற்றிய பதிவுகள் வைரலானதைத் தொடர்ந்து காயம் பற்றிய சர்ச்சைகளுக்கு வீடியோ மூலம் அவர் விளக்கம் அளித்திருக்கிறார். வீடியோவில் தனக்கு தலையில் ஏற்பட்ட காயம் பற்றியும், அதற்கு தையல் போடாப்பட்டு இருப்பது பற்றியும் தெரிவித்திருந்தார்.

சூரி கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ ஸ்கிரீன்ஷாட்களில் அவரது தலையில் தையல் போடப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் அவர் போலி காயங்களை உருவாக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News