செய்திகள்
அமித்ஷா

டெல்லி பற்றிக்கொண்டு எரிவதற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளே காரணம்: அமித்ஷா சாடல்

Published On 2020-01-06 13:32 GMT   |   Update On 2020-01-06 13:32 GMT
கலவரங்களினால் தலைநகர் டெல்லி பற்றி எரிவதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம் என அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்தைப்பற்றியும் அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், பேரணிகள் பற்றி அனைவரும் அறிந்ததே. பல்வேறு இடங்களில் போராட்டக்களத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தினர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர்.

இந்த சட்டத்தைப்பற்றி மத்திய அரசு விளக்கம் அளித்து வருகின்ற நிலையிலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. 

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த போராட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களினால் தலைநகர் டெல்லி பற்றி எரிவதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார். 

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்கவே பிரதமர் மோடி இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

ஆனால் டெல்லி மக்களையும், இளைஞர்களையும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன. ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றி சிறுபான்மையினரிடம் தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்.

கலவரங்களுக்கு பின்னால் உள்ளவர்களுக்கு சட்ட ரீதியாக உதவுவோம் என சொல்கிறார்கள். இன்று கலவரங்களினால் தலைநகர் டெல்லி பற்றி எரிவதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News