செய்திகள்
வருமானவரித்துறை

ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல்- 30 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

Published On 2020-01-03 07:37 GMT   |   Update On 2020-01-03 07:37 GMT
விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
புதுடெல்லி:

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் இருந்து 12 உயர் ரக ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது.

அதாவது ஜனாதிபதி, பிரதமர் போன்ற பெரும் தலைவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக இந்த ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்தனர்.

ரூ.3,600 கோடிக்கு இவற்றை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த கொள்முதலில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டதாகவும், அவர்கள் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் இருந்து ரூ.250 கோடி கமி‌ஷன் பெற்றதாகவும் தகவல் வெளியானது.

மேலும் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு கமி‌ஷன் சென்றதாகவும் புகார் வந்தது. இதில், ராணுவ அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த ஊழல் விவகாரம் வெளிவந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதமே அதாவது மன்மோகன்சிங் பதவியில் இருந்த போதே ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு மோடி அரசு பதவி ஏற்றதைத்தொடர்ந்து இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்தியது.

இதில், இடைத்தரகராக தொழில் அதிபர்கள் சூசன் மோகன் குப்தா, தினேஷ் முனாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், சம்பந்தப்பட்ட ராஜீவ் சக்சேனா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

துபாயில் கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆண்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சூசன் மோகன் குப்தா, தினேஷ் முனாத் ஆகியோருடைய அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவ் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதில், என்ன ஆதாரங்கள் கிடைத்தன என்பது இனி மேல்தான் தெரிய வரும்.
Tags:    

Similar News