செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ‘வயது 22’

Published On 2020-01-02 03:05 GMT   |   Update On 2020-01-02 03:05 GMT
திரிணாமுல் காங்கிரஸ் நேற்று 22-வது வயதில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
கொல்கத்தா:

காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக விளங்கி வந்த மம்தா பானர்ஜி, பின்னர் அதில் இருந்து விலகி கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி திரிணாமுல் காங்கிரசை தொடங்கினார். சிறிய பிராந்திய கட்சியாக தொடங்கப்பட்ட இந்த கட்சி, இன்று தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கட்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே நடந்த பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் 8 இடங்களை கைப்பற்றி அனைவரின் பார்வையையும் ஈர்த்தார் மம்தா பானர்ஜி. இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளத்தில் படிப்படியாக தனது ஆதிக்கத்தை செலுத்திய அவர், பல்வேறு போராட்டங்களை சந்தித்து கட்சியை வலிமையாக்கினார். இதனால் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் முதல் முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதன் மூலம் 34 ஆண்டு இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார், மம்தா. அதன் தொடர்ச்சியாக கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.




இத்தகைய சிறப்பு மிக்க பயணத்தை கொண்டிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் நேற்று 22-வது வயதில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி கட்சி தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘1998 ஜனவரி 1-ந்தேதி தொடங்கிய திரிணாமுல் காங்கிரசின் பயணம் முற்றிலும் போராட்டங்கள் நிறைந்தது. ஆனாலும் மக்களுக்காக போராடுவது என்ற முடிவில் நாம் உறுதியாக இருந்தோம். தொண்டர்கள்தான் எங்களின் மிகப்பெரிய சொத்து. கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


Tags:    

Similar News