செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

தாக்குதலுக்கு ஆளானவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாரா?

Published On 2020-01-01 05:14 GMT   |   Update On 2020-01-01 05:14 GMT
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நபரை மம்தா பனர்ஜி ஆதரவாளர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகியுள்ளது.



மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். புதிய திருத்த சட்டத்திற்கு எதிராக அம்மாநிலம் முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பலர் ஒன்றுகூடி ஒருவரை கடுமையாக தாக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. வீடியோவில் தாக்குதலை நடத்துபவர் மம்தா பானர்ஜி ஆதரவாளர்கள் என்றும் தாக்குதலுக்கு ஆளானவர் பா.ஜ.க. ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

வீடியோவில் தாக்கப்படும் நபர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசியதை எதிர்க்கும் வகையில் மம்தா பானர்ஜி ஆதரவாளர்கள் அவரை கடுமையாக தாக்கியதாக சமூக வலைத்தள வாசிகள் கூறி வருகின்றனர். 



வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் வீடியோவில் உள்ள தாக்குதல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.

உண்மையில் இந்த சம்பவம், மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதியில் பா.ஜ.க.வின் இரு குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலாகும். தாக்குதலுக்கு ஆளான நபர் முன்னாள் மண்டல தலைவர் ஆவார். மண்டல தலைவர் பதவி என்பது, பா.ஜ.க.வின் அலுவல் ரீதியிலான ஓர் பதவி ஆகும். இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்று இருக்கிறது.

அந்த வகையில் வைரல் வீடியோவில் கூறப்பட்டு இருப்பதை போன்று தாக்குதல் சம்பவத்திற்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News