செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் பயணம்

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஏற்றிச் சென்றவருக்கு ரூ.6100 அபராதம்

Published On 2019-12-29 13:34 GMT   |   Update On 2019-12-29 13:34 GMT
லக்னோ நகரில் பிரியங்கா காந்தியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு இருவரும் ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக 6100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
லக்னோ:

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சில அமைப்புகள் சார்பிலும் நடந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனை அடுத்து கலகத்தில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.  பலர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ நகரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி (76) கைது செய்யப்பட்டார்.
 
லக்னோ நகரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால்,  போலீசார் பிரியங்கா காந்தியை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.



இதையடுத்து, பிரியங்கா காந்தி காரில் இருந்து இறங்கி ஸ்கூட்டரின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடி சென்று தாராபுரி குடும்பத்தாரை சந்தித்துப் பேசினார்.

போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்று ஐபிஎஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி சந்தித்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரியங்கா காந்தியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற காங்கிரஸ் பிரமுகருக்கு அதில் சென்ற இருவருமே ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக லக்னோ போக்குவரத்து போலீசார் 6100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
 
Tags:    

Similar News