செய்திகள்
அஜித்பவார்

அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி? : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்

Published On 2019-12-29 13:06 GMT   |   Update On 2019-12-29 13:06 GMT
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 புதிய மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் மந்திரிசபை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
 
அதன்பின்னர், அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி அதிகாலை 5.37 மணிக்கு மகாராஷ்டிரா  ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.

தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டது.

இதனால் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.


 
இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க வழி பிறந்தது.

கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி புதிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 புதிய மந்திரிகளுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் மந்திரிசபை நாளை (திங்கட்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இந்த 12 பேரில் 10 மந்திரிகளுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய துறைகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவாருக்கு உள்துறையுடன் சேர்ந்து துணை முதல் மந்திரி பதவியும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News