செய்திகள்
போண்டா தயாரிக்கும் பணியில் சமையல் கலைஞர்கள்

சாதனைக்காக 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை சுட்டுத்தள்ளிய சமையல்காரர்கள்

Published On 2019-12-29 11:53 GMT   |   Update On 2019-12-29 14:17 GMT
மும்பை அருகேயுள்ள டோம்பிவில்லி பகுதியில் 100 சமையல்காரர்கள் ஒரே இடத்தில் கூடி 12 மணி நேரத்தில் சாதனை முயற்சியாக 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை தயாரித்தனர்.
மும்பை:

உலகில் பலர் பலவாறான சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவில்லி பகுதியை சேர்ந்த சத்யேந்திர ஜோக் என்ற சமையல் கலைஞருக்கு புதுவிதமான ஒரு யோசனை தோன்றியது.

அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தின்பண்டமான ’பட்டாட்டா வடா’ (நம்மூரில் உருளைக்கிழங்கு போண்டா) அதிகமாக தயாரித்து சாதனை படைத்தால் என்ன? என்று சிந்தித்தார்.

இதன் விளைவாக, 1500 கிலோ உருளைக்கிழங்கு, 500 கிலோ சமையல் எண்ணெய், 350 கிலோ மாவு ஆகியவற்றை பயன்படுத்தி நேற்று (சனிக்கிழமை) காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் சுமார் 100 சமையல்காரர்கள் ஒரே இடத்தில் திரண்டு, 12 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி, 25 ஆயிரம் உருளைக்கிழங்கு போண்டாக்களை சுட்டுத்தள்ளினர்.



இந்த சாதனை முயற்சியை உள்ளூரை சேர்ந்த ஏராளமான பேர் நேரில் கண்டு ரசித்ததுடன் சிலர் போண்டாவை சுவைத்தும் பதம்பார்த்தனர்.

விரைவில் இந்த நிகழ்வு ’லிம்கா சாதனை’ புத்தகத்தில் பதிவாகவுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சத்யேந்திர ஜோக், இந்த போண்டாக்கள் அரசு மாணவர் விடுதிகள் மற்றும் வசதி குறைவான குழந்தைகளுக்கு இலவசமாக அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News