செய்திகள்
நித்யானந்தா

இந்தியா வர விருப்பம் இல்லை- நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிடிவாதம்

Published On 2019-12-28 07:15 GMT   |   Update On 2019-12-28 07:15 GMT
தந்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை என்று நித்யானந்தாவின் பெண் சீடர்கள் கூறியுள்ளனர்.
அகமதாபாத்:

பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது 2 மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் கடத்தி சிறை வைத்து இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.

விசாரணையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியது தெரிய வந்தது. மேலும் அந்த இரு பெண்களும் சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டனர்.

அதில், ‘எங்களை யாரும் கடத்தவில்லை. எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது’ என கூறி இருந்தனர். இதற்கிடையே கடத்தல் வழக்கில் நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்ற போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களையும் அவருடன் அழைத்து சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த நிலையில் தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு குஜராத் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இருவரும் மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்டாஸ் நாட்டில் இருந்து வீடியோ காணொலி காட்சி மூலம் ஆஜர் ஆனார்கள்.

அப்போது, ‘நாங்கள் தற்போது சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை’ என்றனர்.

ஆனால் இதை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். வருகிற 16-ந் தேதிக்குள் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் எந்த நாட்டில் உள்ளனர் என இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குஜராத் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News