செய்திகள்
பணம்

ஜார்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்

Published On 2019-12-27 09:25 GMT   |   Update On 2019-12-27 09:25 GMT
ஜார்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 81 எம்.எல்.ஏ.க்களில் 56 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30-ந்தேதி தொடங்கி கடந்த 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்றது.

கடந்த 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் (29-ந்தேதி) முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் ஜார்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற 81 எம்.எல்.ஏ.க்களில் 56 பேர் கோடீஸ்வரர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இது சதவீத அடிப்படையில் 69 சதவீதம் ஆகும்.

இவர்களின் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். கடந்த 2014-ம் ஆண்டு 41 எம்.எல்.ஏ.க்கள் (51 சதவீதம்) கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் மொத்தம் உள்ள 30 பேரில் 22 பேர் கோடீஸ்வரர்கள். பா.ஜனதாவில் 25 எம்.எல்.ஏ.க்களில் 18 பேரும், காங்கிரசின் 16 எம்.எல். ஏ.க்களில் 9 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

Tags:    

Similar News