செய்திகள்
ஹேமந்த் பாட்டீல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு சிவசேனா எம்.பி. ஆதரவு தெரிவித்தாரா?

Published On 2019-12-26 07:55 GMT   |   Update On 2019-12-26 07:55 GMT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதாக வெளியான தகவலை சிவசேனா எம்பி. மறுத்துள்ளார்.
அவுரங்காபாத்:

குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றை சிவசேனா தலைமை விமர்சித்து வரும் நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த  எம்.பி.யான ஹேமந்த் பாட்டீல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 

ஹிங்கோலி தொகுதியின் எம்.பி.யான ஹேமந்த், மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், “நான் சில கூட்டங்களில்  பங்கேற்க வேண்டியிருந்ததால் குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி-க்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என கூறியதாக செய்தி வெளியானது.

ஆனால், இந்த  செய்தியை மறுத்துள்ள ஹேமந்த் பாட்டீல், அப்படி ஒரு கடிதத்தை தான் எழுதவில்லை என்று கூறியுள்ளார். 

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

ரெயில்வே முன்பதிவு தொடர்பாக நான் எழுதிய கடிதங்களில் ஒன்று தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள தகவலை கம்ப்யூட்டர் மூலம் மாற்றி வெளியிட்டுள்ளனர். இந்த புதிய கடிதம் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இதுபற்றி ஹிங்கோலி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News