செய்திகள்
பெங்களூருவில் உள்ள காப்பகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்கும் காப்பகம் - கர்நாடகாவில் திறப்பு

Published On 2019-12-25 13:20 GMT   |   Update On 2019-12-25 13:20 GMT
கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அடைத்து வைப்பதற்கான காப்பகம் பெங்களூரு அருகே திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.
 
அதேபோல், வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. 

இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என உள்துறை மந்திரி அமித் ஷா எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சண்டிகுப்பா என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்கும் காப்பகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.



பொதுச் சமையலறை, பல அறைகள் மற்றும் கழிப்பறைகளுடன் இந்த காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த கட்டிடம் சமூக நலத்துறையின் பராமரிப்பில் இருந்தது. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான தங்கும் விடுதியாக 18 ஆண்டுகளாக செயல்பட்டு பின்னர் மூடப்பட்டது.

கடந்த இரண்டாண்டுகளாக மூடிக்கிடந்த இந்தக் கட்டிடம் பொலிவூட்டப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 1-ம் தேதிக்குள் இந்த காப்பகம் தயார் நிலையில் இருக்கவேண்டுமென என பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நலத்துறை அதிகாரி  தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த காப்பகம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், 'கர்நாடகாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அடைத்துவைத்து, அவர்களின் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே இந்த காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்திற்கும் இந்த காப்பகத்திற்கும் எந்தவித தொடர்ப்பும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News