செய்திகள்
மரணம்

உ.பி. கலவரத்தில் காயம் அடைந்தவர் மரணம்- பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

Published On 2019-12-25 08:58 GMT   |   Update On 2019-12-25 10:03 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வெடித்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
ஆக்ரா:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதிலும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியதிலும் மாணவர்கள் காயம் அடைந்தனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை உ.பி.யில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்முறை உருவாகி கலவரமாக மாறியது. போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கும்பலை கலைத்தனர்.

இந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் ஏற்கனவே 19 பேர் பலியாகி இருந்தனர். தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

வயிற்றில் குண்டு பாய்ந்த மூதீம் என்ற இளைஞர் டெல்லி சப்தர்ஜிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த வாலிபர் இறந்தார்.

இதனால் உ.பி. போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியர் ராபின்வர்மா கைது செய்யப்பட்டார். வன்முறையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை ‘சஸ்பெண்டு’ செய்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்திய லக்னோவை சேர்ந்த மாணவர் ஒருவரை சுவாஜா மொய்னுதீன் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது.
Tags:    

Similar News