செய்திகள்
கொல்கத்தா ஐகோர்ட்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை: மேற்கு வங்காளம் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-12-23 09:45 GMT   |   Update On 2019-12-23 11:11 GMT
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஊடகங்கள் மூலம் செய்யப்படும் பிரசாரத்தை நிறுத்துமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு கல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்து பொதுச்சொத்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.

சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. வன்முறை சம்பவங்களில் பத்துக்கும் அதிகமானவரக்ள் கொல்லப்பட்டனர்.

இதுதவிர, குடியுரிமை சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என நாட்டின் வடபகுதியில் உள்ள பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட 11 மாநிலங்களின் முதல் மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி , குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் பேரணி
மற்றும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தினார்.



இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநில அரசு மக்களின் வரிப்பணத்தை செலவழித்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஊடகங்கள் மூலம் செய்யும் பிரசாரத்தால் ரெயில்வே துறை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவும் உண்டாவதால் இந்த பிரசாரத்துக்கு தடை விதிக்குமாறு கல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஊடகங்கள் மூலமாக செய்யப்படும் அனைத்துவகை பிரசாரங்களையும் நிறுத்துமாறு மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
Tags:    

Similar News