செய்திகள்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி

Published On 2019-12-23 05:43 GMT   |   Update On 2019-12-23 05:43 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ராஞ்சி:

81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆட்சியமைக்க 42 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் ஆளும் பாஜக பின்தங்கியது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றது. அதன்பின்னர் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 

10 மணிக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் கூட்டணி முந்தியது. 11 மணி நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை விட அதிக தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்றது. இந்த கூட்டணி 45 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. 

இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த கூட்டணி மெஜாரிட்டியை நெருங்கி உள்ளதால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிபு சோரனின் மகனான ஹேமந்த் சோரன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் பர்ஹெய்த் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நெருங்குகிறார். தும்கா தொகுதியில் பின்தங்கி உள்ளார்.
Tags:    

Similar News