செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

டெல்லி வன்முறை - மத்திய, மாநில அரசு மற்றும் போலீசார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-12-19 10:45 GMT   |   Update On 2019-12-19 10:45 GMT
ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீசார் பதிலளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள்  டிசம்பர் 15-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் மீது போலீசார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும் மாணவர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையே, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் 6  வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

அப்போது, டெல்லி வன்முறையின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் 52 மாணவர்கள் காயமடைந்துள்ளனர், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வன்முறை தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Tags:    

Similar News