செய்திகள்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. - கவுன்சில் கூட்டத்தில் முடிவு

Published On 2019-12-19 01:22 GMT   |   Update On 2019-12-19 01:22 GMT
அனைத்து லாட்டரிகளுக்கும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் வருவாய் பெருக்கத்தையும், மாநிலங்களுக்கான இழப்பீட்டையும் வலியுறுத்தி பேசினர்.

இந்த கூட்டத்தில், அரசு லாட்டரி, தனியார் லாட்டரி என அனைத்து வகை லாட்டரிகளுக்கும் அதிகபட்ச வரிவிகிதமான 28 சதவீத வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஓட்டெடுப்பு மூலம் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்த புதிய வரிவிகிதம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும்.

நெய்யப்பட்ட பை மற்றும் நெய்யப்படாத பைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. தொழிற்பூங்கா அமைக்க வசதியாக தொழிற்சாலை மனைகளுக்கான நீண்டகால குத்தகைக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதத்தை தளர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவல்களை வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே நிருபர்களிடம் தெரிவித்தார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

லாட்டரிக்கான வரிவிகிதம் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அது பலனளிக்காததால், ஓட்டெடுப்பு நடந்தது. இதற்கு நானோ, ஜி.எஸ்.டி. கவுன்சிலோ காரணம் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News