செய்திகள்
போலீஸ்காரர்கள் இடைநீக்கம்

கோர்ட்டுக்குள் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் - உத்தரபிரதேசத்தில் 18 போலீஸ்காரர்கள் இடைநீக்கம்

Published On 2019-12-18 19:06 GMT   |   Update On 2019-12-18 19:06 GMT
உத்தரபிரதேசத்தில் கோர்ட்டு அறைக்குள் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததற்காக 18 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்துக்கு உட்பட்ட நஜிபாபாத் பகுதியை சேர்ந்த நிலத்தரகரான எஹ்சான் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ‌ஷாநவாஸ், ஜப்பார் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நேற்று முன்தினம் பிஜ்னோர் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.

அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென கோர்ட்டு அறைக்குள் எஹ்சானின் மகன் உள்பட 3 பேர் நுழைந்தனர். அவர்கள் ‌ஷாநவாஸ் மற்றும் ஜப்பார் ஆகியோர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் ‌ஷாநவாஸ் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 போலீஸ்காரர்கள் பலத்த காயமடைந்தனர். எனினும் ஜப்பார் லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் கோர்ட்டு வளாகத்திலேயே போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக அனைத்து தரப்பினரும் குற்றம் சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் தியாகிக்கு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அருண் குமார் சிங் கடிதம் எழுதினார். கோர்ட்டு வளாகத்துக்குள் நுழையும் பொதுமக்களை சோதனை நடத்தாமல் அனுப்பியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என அவர் அதில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த போலீஸ் சூப்பிரண்டு, சம்பவத்தின் போது கோர்ட்டு வளாகத்தில் பணியில் இருந்த 18 போலீஸ்காரர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், 5 பெண் காவலர்களும் அடங்குவர். மேலும் கோர்ட்டு வளாகத்தில் இயங்கி வந்த புறக்காவல் நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News