செய்திகள்
சஞ்சய் ராவத்

ராமர் கோவில் கட்டும் பிரதிபலன் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல: சஞ்சய் ராவத்

Published On 2019-12-18 02:04 GMT   |   Update On 2019-12-18 02:04 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதன் பிரதிபலன் பாரதீய ஜனதாவுக்கு மட்டும்சொந்தமானது அல்ல என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை :

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து, அதற்கான பணிகளில் இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. அயோத்தியில் 4 மாதங்களுக்குள் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், நேற்று நாக்பூரில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதன் பிரதிபலன் பாரதீய ஜனதாவுக்கு செல்கிறதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து சஞ்சய் ராவத் கூறியதாவது:-

அயோத்தியில் விண்ணை முட்டும் அளவுக்கு ராமர் கோவில் கட்டப்படும் என்று அமித்ஷா கூறியது சரிதான். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைத்தது சிவசேனா தான். ராமர் கோவில் கட்டுவதன் பிரதிபலன் விசுவ இந்து பரிஷத், சாதுக்கள், சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா தொண்டர்கள் உள்பட கோடிக்கணக்கான கரசேவகர்களை தான் சென்று சேரும். அது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், “பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் தற்போது ‘சாம்னா’வை படிக்க விரும்புகிறார்கள். முந்தைய ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் (தேவேந்திர பட்னாவிஸ்) தான் சாம்னா படிப்பதில்லை என சொல்லி கொண்டு இருந்தார். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது ‘சாம்னா’வை படித்து இருந்தால் தற்போது மீண்டும் அதிகாரத்துக்கு வந்து இருக்கலாம்” என கிண்டலாக கூறினார்.
Tags:    

Similar News