செய்திகள்
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா மந்திரிசபை 23-ந் தேதி விரிவாக்கம்?

Published On 2019-12-18 01:41 GMT   |   Update On 2019-12-18 01:41 GMT
மகாராஷ்டிரா மந்திரி சபை 23-ந் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
மும்பை :

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தலுக்கு பின் நிலவிய பெரும் அரசியல் குழப்பங்களை அடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. இந்த புதிய அரசில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

தற்போது நாக்பூரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அங்கு நேற்று 3 கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தார்.

பின்னர் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், “சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த இரண்டு நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சரத்பவார் சந்திக்க உள்ளார்” என்றார்.

வருகிற 21-ந் தேதியுடன் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. எனவே வருகிற 23-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News