செய்திகள்
சோனியா காந்தி - பிரதமர் மோடி

சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுத்துள்ளார் - சோனியாகாந்தி பாய்ச்சல்

Published On 2019-12-17 09:52 GMT   |   Update On 2019-12-17 09:52 GMT
மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்துள்ளது என சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாட்டு மக்களிடையே உள்ள புரிந்துணர்வை போக்கி மதரீதியான பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் எண்ணம் என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

அரசியல் லாபத்துக்காக இத்தகைய சூழ்நிலையை பா.ஜனதா அரசு உருவாக்குகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்டி ஜனநாயகத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதே ஒரு அரசின் தலையாய கடமை.

ஆனால் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுத்துள்ளது. நாட்டில் பிரிவினையும், வன்முறையையும் உருவாக்கும் அரசாங்கமாக மாறி உள்ளது. மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பி உள்ளது.

இளைஞர்களின் உரிமைகளை பறித்து நாட்டில் மதரீதியிலான பதற்றத்தை உருவாக்கி அரசியல் ரீதியாக லாபம் அடைய மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்த கதையை பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எழுதியுள்ளனர்.

அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன. அசாமில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வாலிபர்கள் பலியானார்கள்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு நேரில் செல்வதற்கான தைரியத்தை அமித்ஷா வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்காகவும், கல்லூரி கட்டணத்தை உயர்த்தியதற்காகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மாணவர்களுக்கு நக்சல்கள், மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் என பட்டமளிப்பதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது.

நாட்டில் நல்லாட்சியை வழங்க மோடி அரசு தவறிவிட்டது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. வேலையின்மை பிரச்சினை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவில் உள்ளது. கல்வி நிறுவனங்களில் குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் பா.ஜனதா அரசு வன்முறையை தூண்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது.

மக்களை திசை திருப்புவதற்காக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

ஆனால் மோடி அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் விழித்துக் கொண்டால் புதிய மாற்றம் உண்டாகும்.

இவ்வாற அவர் கூறினார்.
Tags:    

Similar News