செய்திகள்
கமல் ஹாசன்

பொருளாதாரத்தை சரி செய்யாமல் குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? -கமல் கேள்வி

Published On 2019-12-17 07:50 GMT   |   Update On 2019-12-17 07:50 GMT
பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது ஏன்? என கமல் ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யாமல் குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலையை தடுக்காமல் மக்களை மதரீதியாக பிரிப்பது சரியல்ல. குடியுரிமை சட்டத்திருத்தம் மக்களுக்கு எதிரான போர்.



போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான அடி, ஜனநாயகத்தின் மீதான அடி. போராடினால் குரலை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். பாகிஸ்தான் இந்துக்களுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கை இந்துக்களுக்கு வழங்காதது ஏன்? பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா?

இந்த சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவும், பாமகவும், தமிழினத்திற்கும், தேசத்திற்கும் துரோகம் செய்துவிட்டன. 

இளைஞர்கள் அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் கேள்விகள் கட்டுப்படுத்தப்பட்டால், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. நான் ஒரு மாணவனாக (எனது துறையில்) அவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டரீதியான தீர்வை நோக்கி, போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்வோம். 

இவ்வாறு கமல் கூறினார்.
Tags:    

Similar News