செய்திகள்
பாஜக

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜக பேரணி... தடுத்து நிறுத்திய போலீஸ்...

Published On 2019-12-16 13:18 GMT   |   Update On 2019-12-16 13:18 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்திலும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. தீ வைப்பு மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடுதல் போன்ற வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. 

இந்த சட்டத்திற்கு எதிராக, முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. 



சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டத்தை ஆதரித்து மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. காரியா மோர் பகுதியில் இருந்து ஜாதவ்பூர் நோக்கி ஏராளமான பாஜகவினர் பேரணியாக சென்றனர். 

அப்போது சுலேகா கிராசிங் அருகே பேரிகார்டுகளை போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், பேரிகார்டுகளை தள்ளிவிட்டு பேரணியை தொடர பாஜகவினர் முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்தபோது, இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்திலேயே பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் பேரணி நடைபெற்றபோது, அதற்கு போட்டியாக பாஜக பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News