செய்திகள்
சஸ்பெண்டு

மகனுக்கு ஆடம்பர திருமணம் நடத்திய கம்யூனிஸ்டு நிர்வாகி ‘சஸ்பெண்டு’

Published On 2019-12-16 07:38 GMT   |   Update On 2019-12-16 07:38 GMT
கேரளாவில் இசை விருந்துடன் மகனுக்கு ஆடம்பர திருமணம் நடத்திய கம்யூனிஸ்டு நிர்வாகி கட்சியில் இருந்து 6 மாதங்கள் நீக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் சேர்தலாவை அடுத்த கஞ்சிகுழி, அரிபரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்.

மனோகரன், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஏரியா குழு நிர்வாகியாக உள்ளார். இவரது மகனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்தையொட்டி மண்டபத்தில் பிரமாண்ட இசை நடன நிகழ்ச்சியும் நடந்தது. மிகவும் ஆடம்பரமாக நடந்த திருமண விழா அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மனோகரன் மகன் திருமணம் ஆடம்பரமாக நடந்ததை கண்ட கட்சி நிர்வாகிகள் பலர் அதனை கடுமையாக விமர்சித்தனர். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக மனோகரன் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினர்.

மனோகரன் மீது கட்சி நிர்வாகிகள் கொடுத்த புகார்கள் குறித்து விசாரிக்க நேற்று கட்சியின் கஞ்சிகுழி ஏரியா நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதில், மனோகரன் மகனுக்கு நடத்திய திருமணம் மூலம் மக்கள் மத்தியில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கட்சியை விமர்சனத்திற்கு உள்ளாக்கிய மனோகரனை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து மனோகரனை 6 மாதம் சஸ்பெண்டு செய்ய கஞ்சிகுழி ஏரியா கமிட்டி முடிவு செய்தது. இந்த தகவல் மனோகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டதை அறிந்ததும், மனோகரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகன் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது திருமணத்திற்காக அவரே இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார். இதில் எனது பங்கு எதுவும் இல்லை.

மகன் செய்த ஏற்பாட்டிற்கு கட்சி என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இது எனக்கு வேதனையை தருகிறது.

இது பற்றி நான், கட்சி மேலிட நிர்வாகிகளிடம் தெரிவிப்பேன். என் பக்கம் தவறு இல்லை என்பதையும் விளக்குவேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சிறு வயது முதலே உறுப்பினராக உள்ளேன். கட்சியின் மீதும், கட்சி கொள்கை மீதும் பிடிப்புடன் இருந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News