செய்திகள்
மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2019-12-15 16:56 GMT   |   Update On 2019-12-15 16:56 GMT
தென்கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு  எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் அளித்த பேட்டியில், 

மாணவர்கள் போராட்டத்தின் போது ஒரு கும்பல் தான் இந்த கலவரத்தை மேற்கொண்டது. அவர்கள் தான் பேருந்து இரு சக்கர வாகனங்களுக்கு  தீ வைத்தது. அவர்கள் தான் எங்கள் மீது கற்களாய் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 போலீசார் காயம் அடைந்தனர். நாங்கள் யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியால் தென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News