செய்திகள்
பிரகலாத் ஜோஷி

போலி காந்திகள்: சோனியா, ராகுல், பிரியங்கா மீது மத்திய மந்திரி பாய்ச்சல்

Published On 2019-12-15 14:15 GMT   |   Update On 2019-12-15 14:15 GMT
நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி என்ற பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சோனியாவின் குடும்பத்தாரை ’போலி காந்திகள்’ என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி விமர்சித்துள்ளார்.
பெங்களூரு:

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல்  பிரசாரத்தின்போது நேற்று முன்தினம் தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டத்தையும்  சந்திக்க நேர்ந்தது.

இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக  மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.   
 
இந்நிலையில், உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்தார்.



விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் டெல்லி  ராம்லீலா திடலில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணியை காங்கிரஸ் கட்சி நேற்று நடத்தியது.

இந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ‘எனது பெயர் ராகுல் காந்தி ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.

அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இன்று சோனியாவின் குடும்பத்தாரை ’போலி காந்திகள்’ என விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பின்மை என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில கட்சிகள்
குடியுரிமை சட்டத்திருத்ததை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக்கி நாட்டில் அமைதியின்மையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

'நான் ராகுல் சாவர்க்கர் அல்ல என்று கூறிய ராகுல் காந்தி, ராகுல் உத்தவ் தாக்கரே ஆனாலும் ஆகலாம். ஒருபோதும் அவர் ராகுல் சாவர்க்கர்  ஆக மாறிவிட முடியாது. நீங்கள் (ராகுல்) யாராக வேண்டுமானாலும் மாறுங்கள். ஆனால், வினாயக் தாமோதர் சாவர்க்கரைப் போன்ற ஒரு தேசபக்தருக்கு எதிராக பேசுவதில் இருந்தே காங்கிரஸ் கட்சி எரிச்சலில் உள்ளதை உணர்த்துகிறது.

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி இவர்கள் எல்லாம் போலி காந்திகள். இவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் பேச முடியும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

உகான்டா, வங்காளதேசம் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இதற்கு முன்னர் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் பிறநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து இந்தியாவுக்கு வந்த 550 அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் இருந்து யார் விண்ணப்பித்தாலும் அரசு பரிசீலனை செய்யும் என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.
Tags:    

Similar News