செய்திகள்
கடிதம் எழுதிய வர்திகா சிங்

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

Published On 2019-12-15 05:30 GMT   |   Update On 2019-12-15 08:07 GMT
நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கவேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
லக்னோ:

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த நிர்பயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். 

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராம்சிங், பவன்குப்தா, முகேஷ்சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த வழக்கில் 6 பேரில் 5 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டான். சிறுவன் கடந்த 2015-ம் ஆண்டு தனது தண்டனை காலம் நிறைவடைந்ததையடுத்து விடுவிக்கப்பட்டான். 

மற்ற குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா, அக்‌ஷய் தாக்கூர் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 

இதையடுத்து, டெல்லி நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை டெல்லி திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். 

இந்நிலையில், நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, வர்திகா சிங் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு ரத்தக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

எனது முயற்சிக்கு நடிகைகள், பெண் எம்பிக்கள் ஆதரவளிக்க வேண்டும். இதன்மூலம் சமுதாயத்தில் நாம் மாற்ற கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News