செய்திகள்
லோக் அதாலத்

தெலுங்கானாவில் இன்று லோக் அதாலத் மூலம் 25,985 வழக்குகள் தீர்த்து வைப்பு

Published On 2019-12-14 14:24 GMT   |   Update On 2019-12-14 14:24 GMT
தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ரூ.54.60 கோடி வழங்கப்பட்டது.
ஐதராபாத்:

'லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானம் அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள்  மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.

இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இந்த நடைமுறை உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு
89-ன்கீழ் வருகின்றது.

இப்படிப்பட்ட நடைமுறையின் மூலம் ஆண்டுதோறும் பல மாநிலங்களில் லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. அவ்வகையில், தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில்  இன்று நடைபெற்ற ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ரூ.54.60 கோடி வழங்கப்பட்டது.

ஐதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் தலைமை வழிக்காட்டலின் பேரில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சில வழக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றுக்கு இன்று தீர்வு காணப்பட்டன.

ஆரம்பநிலையில் உள்ள 14 ஆயிரத்து 462 வழக்குள் மற்றும் விசாரணை நிலுவையில் இருந்த 11 ஆயிரத்து 523 வழக்குகள் என மொத்தம் 25 ஆயிரத்து 985 வழக்குகளுக்கு இன்று சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 54.60 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News