செய்திகள்
திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாம் மாணவர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published On 2019-12-13 12:10 GMT   |   Update On 2019-12-13 12:10 GMT
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை நேற்று ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் சட்டமாக உருபெற்றது.

இதற்கிடையில், வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தங்கள் பெரும்பான்மையும், பெருளாதாரம் மற்றும் கல்வியில் கிடைக்கும் சலுகைகள், வேலைவாய்ப்பில் கிடைக்கும் முன்னுரிமை மற்றும் பாரம்பரியமும் அழிந்துவிடும் என வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்களும், பழங்குடி மக்களும் அச்சமடைந்துள்ளனர். 

இதனால் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



போராட்டக்காரர்களை ஒடுக்கம் நடவடிக்கையில் மாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News