செய்திகள்
அசாமில் போராட்டம்

அசாமில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Published On 2019-12-12 13:22 GMT   |   Update On 2019-12-12 13:22 GMT
அசாமில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிய முக்கிய போலீஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி:

பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவருகிறது. 

வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால் தங்கள் பெரும்பான்மையும், பாரம்பரியமும் அழிந்துவிடும் என  வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்களும், பழங்குடி மக்களும் கருதுகின்றனர். 

இதனால்,  அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. 

அம்மாநில தலைநகரான கவுகாத்தியில் திரண்ட போராட்டக்காரர்கள் கடைகள், வாகனங்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றை எல்லாம் தீ வைத்துக் கொளுத்தி வருகின்றனர். மாநில முதல் மந்திரியின் வீட்டில் கற்களும் எறியப்பட்டது. ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.



இந்நிலையில், அசாம் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிய முக்கிய போலீஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கவுகாத்தி நகர போலீஸ் கமிஷனராக இருந்த தீபக் குமார் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிறப்பு பாதுகாப்பு குழுவில் பணி புரிந்த முன்னா பிரசாத் குப்தா போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 

சட்டம் - ஒழுங்கு துறைக்கான போலீஸ் கூடுதல் இயக்குனராக (எடிஜிபி) இருந்த முகேஷ் அகர்வால் சிஐடி துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜிபி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கிய போலீஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து மாநில உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதற்கிடையில், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் வடகிழக்கு மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும், அசாம் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News