செய்திகள்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் பைய்யாஜி ஜோஷி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒரு தைரியமான நடவடிக்கை -ஆர்.எஸ்.எஸ் பாராட்டு

Published On 2019-12-12 09:58 GMT   |   Update On 2019-12-12 09:58 GMT
தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒரு தைரியமான நடவடிக்கை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
நாக்பூர்:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. 

இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். 

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா ஒரு தைரியமான நடவடிக்கை என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் பைய்யாஜி ஜோஷி கூறியதுடன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பாராட்டு தெரிவித்து நன்றி கூறியுள்ளார்.

‘வேறொரு நாட்டில் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரும் ஒரு இந்துவை ஊடுருவும் நபர் என்று சொல்ல முடியாது, ஆனால் ஒரு அகதி என்பதே ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நிலைப்பாடு. 

அவ்வப்போது நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்க்கும்போது, ​​ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.


 
அந்த மக்கள் எங்கு சென்றார்கள் என்ற கேள்வி எழும்போது, அவர்களில் பலர் இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த  நாடுகளில் துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த இடமும் இல்லை, இங்கு அவர்கள் மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழ முடியும், எனவே அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

இந்த மசோதா மற்ற நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு மரியாதையான வாழ்க்கை அளிப்பதாக நான் உணர்கிறேன், நாங்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். 

இப்போது, அவர்களின் அகதி நிலை முடிவுக்கு வரும், அவர்கள் குடிமக்களாக வாழ்வார்கள் மற்றும் நாட்டில் குடிமக்களின் உரிமைகளின் பலன்களைப் பெறுவார்கள். இந்த தைரியமான முடிவை எடுத்த பாஜக தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’, என தெரிவித்தார்.

இந்த சட்ட திருத்த மசோதா மூலம் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதையும் ஜோஷி எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News