செய்திகள்
வாக்காளர்கள்

ஜார்க்கண்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு- மதியம் 1 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2019-12-12 09:19 GMT   |   Update On 2019-12-12 12:06 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட தேர்தலில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். ஆளுநர் திரவுபதி முர்மு ராஞ்சியிலும், முன்னாள் மத்திய மந்திரி சுபோத்காந்த் சகாய் கிஜ்ரியிலும் ஓட்டு போட்டனர். முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா ஹசாரிபாக்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.



காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது.9 மணி வரை 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. பின்னர் நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி சராசரியாக 45.14 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஞ்சி, ஹாதியா, கான்கே, பர்காதா மற்றும் ராம்கர் தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மற்ற பகுதிகளில் 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்.
Tags:    

Similar News