செய்திகள்
கமல்ஹாசன்

நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சையா? - குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றி கமல் ஆவேசம்

Published On 2019-12-11 13:25 GMT   |   Update On 2019-12-11 13:25 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும் நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் குற்றத்துக்கு நிகரானது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் இன்று அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால், பிழை இல்லாத நல்அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகமே.

நோயில்லா மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்துக்கு நிகரானது இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும் திட்டமும். இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை.



காந்தியின் 150-வது பிறந்தநாளை, அவரது மறைவுநாளாக மாற்றி விட்டால் அவர் கனவுகண்ட இந்தியா உருத்தெரியாமல் அழிந்து விடுமா என்ன?

முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர். இது ‘பாமர இந்தியாவல்ல’ உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. ‘இளம் இந்தியா’ விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதாமகர்களுக்கு இது புரிய வேண்டும்.

மய்யத்தின் வாதம், ‘இதில் கொஞ்சம்’ ‘அதில் கொஞ்சம்’ கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதமல்ல. நமக்கு பின்னும் நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளைப் பற்றித் தொடரும் பெருங்கூட்டம் நாம்.

அச்சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்யச் சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார். ஆதலால், நாளை நமதே!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவில், ‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிலிருந்து இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்களும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களும் விடுப்பட்டது ஏன்? இந்த மசோதா வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்படவில்லை என்றால் இலங்கை தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் புறக்கணிப்பது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பி இருந்தது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News