செய்திகள்
மூத்த குடிமக்கள்

மாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்

Published On 2019-12-11 10:24 GMT   |   Update On 2019-12-11 10:26 GMT
மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி இந்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா, பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு தனி தொகுதி ஒதுக்கீட்டு முறை நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மாமனார் மற்றும் மாமியாரை கவனிக்காத மருமக்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் (திருத்தம்) மசோதாவின் படி, வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாத பிள்ளைகள் மற்றும் மருமக்கள் பராமரிப்புத் தொகையாக அவர்களுக்கு அதிகபட்சம் மாதம் ரூ.10,000 அளிக்க வேண்டும். 

தற்போது, இந்த வரம்பு நீக்கப்பட்டு, அதிகம் சம்பாதிப்பவர்கள் தங்கள் பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையாக அதிக பணம் செலுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு தண்டனையாக, குறைந்தபட்சம் ரூ.5,000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என புதிய சட்ட திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News