செய்திகள்
உச்ச நீதிமன்றம்

2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் -உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2019-12-11 07:48 GMT   |   Update On 2019-12-11 07:48 GMT
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுவில் கூறியிருந்தனர். 

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதால் திமுக கூட்டணியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திருமாவளவனும் வழக்கு தொடர்ந்தார். 



இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் சிங்வி வாதாடும்போது, புதிய மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு முறை உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்படவில்லை என கூறினார். 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊராட்சி  தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்த சம்மதமா? என திமுகவிடம் தலைமை நீதிபதி பாப்டே கேட்டார். அதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வருவதாக திமுக தரப்பு வழக்கறிஞர்  கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரமாண பத்திரத்தை அரைகுறையாக படித்துவிட்டு திமுக வாதாடுவதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க முடியாது என கூறிவிட்டனர். அதேசமயம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News