செய்திகள்
மருத்துவமனையில் அவர் உடல் வைக்கப்பட்ட காட்சி

ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகர் சுட்டுக்கொலை

Published On 2019-12-11 05:47 GMT   |   Update On 2019-12-11 05:47 GMT
ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஸ்வரம்:

ஒடிசா மாநிலத்தில் முன்னணி சமூக சேவகராக திகழ்ந்து வந்தவர் அபிமன்யூ பாண்டா (வயது 48).

இவர், காந்தமால் மாவட்டம் பலிகுடா காவல் சரகத்துக்கு உட்பட்ட பத்திரசாகி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். மாநிலத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார்.

இதனால் பல்வேறு பிரச்சினைகளிலும் அவர் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மது வியாபாரிகள் அவர் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தனது வீட்டு முன்பு அபிமன்யூ பாண்டா நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அபிமன்யூ பாண்டாவை சரமாரியாக சுட்டார்கள்.

இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

முன்னணி சமூக சேவகர் கொலை செய்யப்பட்டது ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரை சுட்டவர்கள் யார்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News