செய்திகள்
பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வந்த பொருட்கள்

பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்

Published On 2019-12-10 11:51 GMT   |   Update On 2019-12-10 11:51 GMT
பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளை ஏலம் விட்டதன் மூலம் மத்திய அரசுக்கு 15.13 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கலாச்சாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். இதன் பின்னர் பிரதமர் மோடி செல்லும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களின் போது பல தலைவர்களை சந்திக்கிறார். 

அந்த சந்திப்பின் போது பலரும் அவருக்கு அன்பளிப்பாக நினைவு பரிசுகள் பலவற்றை வழங்குகின்றனர். இதுதவிர உள்நாட்டிலும் அவரை சந்திக்கவரும் பிரமுகர்களும் மோடிக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு பெறப்படும் அன்பளிப்புகள் மத்திய அரசால் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.



இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பாக இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். 

அந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் பட்டேல்,''பிரதமர் மோடிக்கு 2014 முதல் இதுவரை கிடைத்த அன்பளிப்புகள் 3 முறை ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 கோடியே 13 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை முழுவதும் கங்கை நதி தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார். 
Tags:    

Similar News