செய்திகள்
சுப்ரீம் கோர்ட், டெல்லி

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு

Published On 2019-12-10 10:21 GMT   |   Update On 2019-12-10 10:21 GMT
டெல்லியில் ஓடும் பஸ்சுக்குள் கற்பழிக்கப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார் சிங் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட (குறிப்பு பெயர்)  நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவி பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய் குமார் சிங்  ஆகியோரையும், 16 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங்  ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதிப்படுத்தியது.



இதற்கிடையில், வினய் சர்மா என்ற மரண தண்டனை கைதி மத்திய அரசுக்கு அனுப்பிய கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரைத்தது.

இந்த நிலையில் பல்வேறு மாநில சிறைத்துறை சார்பில், 10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ந் தேதிக்குள் தயாரித்து தரும்படி, பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பீகார் மாநில பக்சர் சிறையிலேயே அதிகமாக இந்த கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் தூக்கு கயிற்றின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து இருந்து இதை பயன்படுத்த முடியாது.

இதனால் டெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அக்‌ஷய் குமார் சிங்  சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 
Tags:    

Similar News