செய்திகள்
மத்திய ரிசர்வ் போலீஸ் படை

ஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் - அதிகாரி உள்பட 2 பேர் பலி

Published On 2019-12-10 05:59 GMT   |   Update On 2019-12-10 05:59 GMT
ஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்குள் ஏற்பட்ட மோதலில் அதிகாரி உள்பட இருவர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
ராஞ்சி:

ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதால் வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொகாரோவில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்குள் ஏற்பட்ட மோதலில் அதிகாரி உள்பட இருவர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 226-வது படைப்பிரிவு அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்தது.  

‘நேற்று இரவு தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசாருக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் உதவி கமாண்டண்ட் ரேங்க் அதிகாரி மற்றும் உதவி துணை ஆய்வாளர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News