செய்திகள்
நித்யானந்தா

‘கைலாசா’ நாட்டு குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்- வீடியோவில் நித்யானந்தா தகவல்

Published On 2019-12-10 05:28 GMT   |   Update On 2019-12-10 05:28 GMT
கைலாசா நாட்டு குடியுரிமைக்காக 12 லட்சம் நபர்கள் விண்ணப்பித்திருப்பதாக நித்யானந்தா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது சமீபத்தில் குழந்தைகளை கடத்தியதாக புகார் எழுந்தது.

பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் மகள்களை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்திற்கு கடத்தி சென்று சிறை வைத்ததாக போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு ஒன்றும் உள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது.

அவர் ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாட்டை வரவேற்று சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவியத் தொடங்கின.

தலைமறைவான நித்யானந்தா எங்கு இருக்கிறார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் புது, புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

நித்யானந்தா நேற்று தனது ‘பேஸ்புக்‘ பக்கத்தில் நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது:-

‘கைலாசா’ தனி நாடு அறிவித்த பின்னர் அதை வரவேற்று லட்சக்கணக்கில் இ-மெயில்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தினந்தோறும் 1 லட்சம் பேர் ‘கைலாசா’ இணைய தளத்தில் உறுப்பினர்கள் ஆகின்றனர். ‘கைலாசா’ நாட்டை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கார்த்திகை தீபத் திருநாளில் அறிவிக்க உள்ளேன்.

‘கைலாசா’ தனி நாடு அறிவிப்புக்கு இவ்வளவு தூரம் வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கைலாசா நாடு அமைக்கவும், சீடர்களுடன் வாழவும் சில நாடுகளின் அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.

குடியுரிமை கேட்டு இ-மெயில் அனுப்பியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பதில் அளிக்க சிறிது நேரம் கொடுங்கள். இவ்வளவு பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பலர் நிலம் தருவதாக முன் வந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள அவர்களுக்கு நன்றி.

சில நாடுகளின் அரசுகள் எங்களை அதிகாரப்பூர்வமாக அணுகி ‘கைலாசா’ நாடு அமைக்க அழைத்துள்ளனர். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவோம். மிக விரைவில் ‘கைலாசா’ நாட்டுக்கு இடம் அமையும். அப்படி அமைந்தால் அதுபற்றி அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நித்யானந்தா வெளியிட்ட மற்றொரு வீடியோவில் அவர் பேசி இருப்ப தாவது:-

நான் வாங்கியுள்ளதாக கூறப்படும் தீவு (கைலாச நாடு) எங்கு இருக்கிறது என்று தெரிவித்தால் அங்கு போய் நிம்மதியாக செட்டிலாகி விடுவேன். இந்த கைலாச நாடு மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது. மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் வாங்கிய காசுக்கு கூவுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

இதற்கிடையே நித்யானந்தா மீது அவரது முன்னாள் சீடர்களில் ஒருவரான லெனின் கருப்பன் என்பவர் தொடர்ந்த வழக்கு பெங்களூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரைண்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நித்யானந்தாவை வருகிற 12-ந்தேதிக்குள் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கோர்ட்டு விதித்துள்ள கெடுவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் நித்யானந்தாவை கைது செய்ய கர்நாடகா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News