செய்திகள்
மம்தா பானர்ஜி

ஒரு குடிமகனைக்கூட அகதியாக மாற்ற விட மாட்டோம் -மம்தா ஆவேசம்

Published On 2019-12-09 10:53 GMT   |   Update On 2019-12-09 10:53 GMT
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக ஒரு குடிமகனைக்கூட அகதியாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
காரக்பூர்:

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவுப்பட்டியலில் கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் வெளியிடப்பட்டது. இதில் பலரது பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிப்பதற்கான குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் இன்று நடைபெற்றன.

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக ஒரு குடிமகன் கூட அகதியாக மாற்றப்பட அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

‘தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் அதை ஒருபோதும் வங்காளத்தில் அனுமதிக்க மாட்டோம். அவர்களால் இந்த நாட்டின் சட்டபூர்வமான குடிமகனை வெளியேற்றவோ அல்லது அவரை / அவளை அகதியாக மாற்றவோ முடியாது’ என காரக்பூர் நகரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிப் பேரணியில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Tags:    

Similar News