செய்திகள்
முகத்தில் காயம் அடைந்த நடன பெண் ஹீனா தேவிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு

Published On 2019-12-07 07:32 GMT   |   Update On 2019-12-07 07:32 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழாவில் தொடர்ந்து நடனம் ஆடாததால் பெண் முகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் கிராம பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.

இவரது மகள் திருமணம் கடந்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதில் இசை கச்சேரியுடன், நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்து இருந்தார்.

அன்று இரவு பெண்கள் தங்கள் குழுவினருடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிரபலமான பாடல் இசைக்கப்பட்டது. அப்போது நடனமாடிய பெண் ஹீனா தேவி(27) ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

பல பாடல்களுக்கு தொடர்ந்து நடனமாடியதால் சிறிய நேரம் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பூல் சிங்(50) என்பவர் நாட்டு துப்பாக்கியால் ஹீனா தேவியை நோக்கி சரமாரியாக சுட்டார்.

இவர் சுதிர்சிங் உறவினர் ஆவார். இதற்கிடையே தன் பங்கிற்கு சுதிர்சிங்கும் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் நடன பெண் ஹீனா தேவியின் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவரது வாய் தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது. மேலும் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சுதிர்சிங்கின் உறவினர்கள் மிதிலேஷ், கமலேஷ் ஆகிய 2 சிறுவர்கள் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இவர்களின் கை மணிக்கட்டு மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான பஞ்சாயத்து தலைவர் சுதிர்சிங் அவரது உறவினர் பூல்சிங் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையே காயம் அடைந்த நடன பெண் ஹீனா தேவி லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது தாடையில் ஆபரேசன் செய்யப்பட்டது. தற்போது அவரது நிலை சீராக உள்ளது.

Tags:    

Similar News