செய்திகள்
வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் -வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு

Published On 2019-12-07 06:13 GMT   |   Update On 2019-12-07 06:13 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறைக் கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி சிசாய் தொகுதியில் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.

கும்லா மாவட்டம் சிசாய் தொகுதியில் உள்ள 36-வது வாக்குச்சாவடிக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை போலீசாரின் ஆயுதங்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்றபடி எந்த இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறவில்லை எனவும், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாகவும் ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News