செய்திகள்
ப.சிதம்பரம்

ஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்

Published On 2019-12-07 02:02 GMT   |   Update On 2019-12-07 02:02 GMT
மகாராஷ்டிராவில் பா.ஜனதா மறுக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் தோற்கடிக்கப்பட்டது. இப்போது ஜார்கண்டிலும் நாங்கள் பா.ஜனதாவை தோற்கடிப்போம் என்று முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ராஞ்சி :

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்குள்ள ராஞ்சிக்கு சென்றார்.

மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களில் இது 5 சதவீதமாக குறைந்துவிட்டது. திறனற்றவர்கள் கையில் அரசு இருப்பதால் இது மேலும் குறையும். இந்தியாவின் நிலை இப்படியென்றால், ஜார்கண்டின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

அரசாங்கத்தின் இரட்டை என்ஜின் கோட்பாடு, இரண்டு என்ஜின்களும் ஒரே திசையில் சென்றால் நல்லது. ஆனால் அவை எதிரெதிர் திசையில் சென்றால் சீரழிவை ஏற்படுத்தும்.



2014-15ல் ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரூ.43 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அது 2018-19ல் இரண்டு மடங்காகி ரூ.85 ஆயிரம் கோடியாக உள்ளது. அப்படியென்றால் கடந்த 5 ஆண்டுகளில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் இரண்டு மடங்கு கடனில் மூழ்கியுள்ளனர் என்று பொருள்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய தகவல்படி ஜார்கண்டில் 44 திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மோட்டார் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. பல நிலக்கரி, இரும்பு, வாகன தொழில்களின் துணை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இங்குள்ள வர்த்தகசபை தலைவரே 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் சராசரியாக 7.9 சதவீதமாக உள்ளது. ஆனால் ஜார்கண்ட் வேலையில்லா திண்டாட்டத்தில் 4-வது பெரிய மாநிலமாக 15.1 சதவீதத்தில் உள்ளது.

நாடு மிகவும் நெருக்கடியாக உள்ள இந்த நேரத்தில் இங்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே மக்கள் இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது. மகாராஷ்டிராவில் பா.ஜனதா மறுக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் தோற்கடிக்கப்பட்டது. இப்போது ஜார்கண்டிலும் நாங்கள் பா.ஜனதாவை தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News